வேலூர் தவெக வேட்பாளர் வினோத் கண்ணன்; விஜய்யிடம் ரிப்போர்ட் கொடுத்த ஆதவ் டீம்!

vellorenow
By
2 Min Read

தமிழக வெற்றி கழக வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வினோத் கண்ணனை களமிறக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தவெக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் முதற்கட்டமாக சுமார் 45 வேட்பாளர்களுடன் அவர் நேர்காணல் நடத்தினார்.அவர்களுக்குத் தொகுதி பணிகள் குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பலரும் விருப்பமனு அளித்திருந்த நிலையில், முதற்கட்டமாக நேர்காணலில் வேலூர் மேற்கு மாவட்ட த.வெ.க செயற்குழு உறுப்பினராக கட்சிப் பொறுப்பு வகிக்கும் வினோத் கண்ணன் மற்றும் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஆகிய இருவரிடம் தவெக தலைவர் விஜய் நேர்காணல் நடத்தி முடித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய தவெகவினர்,”வேலூர் அகரம்சேரியில், கடந்த பிப்-23ம் தேதி நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன் சிறப்பாக செய்து முடித்து தலைவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.கட்சிப் பணிகளையும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

தி.மு.க அமைச்சரும், வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான எ.வ.வேலு, `வேலூர் சட்டமன்றத் தொகுதியில் கணிசமாக இருக்கும் முதலியார்கள், இஸ்லாமியர்களின் வாக்குகளை நடிகர் விஜய்யின் கட்சி டார்கெட் செய்திருக்கிறது (வினோத் கண்ணனின் பெயரைக் குறிப்பிடாமல்) என பேசியிருந்தார்.

வினோத் கண்ணன் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.பொருளாதாரத்திலும் வலுவாக இருக்கிறார்.நாராயணி பீட மடாதிபதி சக்தி அம்மாவின் ஆசி வினோத் கண்ணனுக்கு உள்ளது. சிட்டிங் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனும் முதலியார் சமூகம். கார்த்திகேயன் மீது சொந்தக் கட்சியிலேயே பல முட்டல் மோதல்கள் உள்ளன. ஆதலால் வேலூர் தொகுதிக்கு வினோத் கண்ணன் தான் சரியானவர் என ஆதவ் டீம் விஜய்யிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளது.

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமும் வினோத் கண்ணனின் அணுகுமுறையும் பரவாயில்லை.கட்சி தலைமையிலும் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். எங்களுக்கு கிடைத்த தகவல்படி வேலூர் தொகுதிக்கு வினோத் கண்ணன் வேட்பாளராகவும் , அணைக்கட்டு தொகுதிக்கு வேல்முருகனும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. தலைவர் விஜய் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை செய்து முடிப்போம்.தளபதி விஜய் தான் வேட்பாளர் என்று களப்பணியை தீவிரமாக செய்யவுள்ளோம்,”என்றனர் .

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *