பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவசவுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. கூடுதல் எஸ்பி கோவிந்தராசு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சென்னகேசவன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் இளவரசன், உதவி இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
100 மீட்டர் தூரம் மட்டுமே………
ஆட்சியர் சிவசவுந்தரவல்லி பேசுகையில்,”எருதுகள் ஓடும் இடத்திற்கு இருபுறங்களிலும் இரட்டை அடுக்கு தடுப்பு அரண் அமைக்க வேண்டும். ஒவ்வொரு புறமும் இருதடுப்பு அரண்களுக்கு இடையில் 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். இந்த தடுப்பு அரணானது 200 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு, அதில் 100 மீட்டர் தூரம் மட்டுமே பந்தய தூரமாக இருக்க வேண்டும். பார்வையாளர்களை பாதுகாப்பு அரணின் 150 மீட்டர் தூரம் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

அதற்குமேல் சிறு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அரணின் இருபுறமும் போலீசார் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். எருது ஓட்டம் 5 மணி நேரத்திற்கு மட்டுமே நடத்த வேண்டும். இதில் எத்தனை காளைகள் பங்கேற்க உள்ளது என்பதை விழா பொறுப்பாளர்களிடம் எழுத்து பூர்வமாக பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்-ஆட்சியர்
காளைகளின் உரிமையாளர்கள் 200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். போட்டி தொடங்கும் இடத்திலும், முடிவடையும் இடத்திலும் சோதனையிடும் கால்நடை மருத்துவக்குழு இடம் பெற வேண்டும். காளைகள் ஓடும் பகுதியானது முழுவதுமாக தென்னைநார்களால் நிரப்ப வேண்டும். காளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் தடுக்க போதிய இடைவெளியில் காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்க வேண்டும்.மாடு ஓடும் பாதையில் பொதுமக்கள் யாரும் இருக்க கூடாது. காளைகளை அடித்தல், கூர்மையான பொருளை கொண்டு தொந்தரவு செய்தல் போன்றவை குற்றமாக கருதப்பட்டு தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,”என பேசினார் .