வேலூர் மாவட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சுப்புலெட்சுமி வெளியிட்டார்.அந்த பட்டியலில் மாவட்டத்தில் 10 லட்சத்து 88 ஆயிரத்து 5 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 2 லட்சத்து 15 ஆயிரத்து 25 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆட்சியர் சுப்புலெட்சுமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ” வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 88 ஆயிரத்து 5 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். இதில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் இறப்பு, நிரந்தர குடிபெயர்வு, இருமுறை பதிவு, கண்டறிய இயலாதவர்கள் மற்றும் இதர காரணங்களுக்காக 2 லட்சத்து 15 ஆயிரத்து 25 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த 1,314 வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1,200 வாக்காளர்கள் என்ற அடிப்படையை கொண்டு 113 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது 1,427 வாக்குச்சாவடிகள் வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியல் தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் அடுத்த மாதம் 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கானக மேற்கண்ட அலுவலகங்களிலேயே படிவங்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான படிவங்களை வழங்கலாம். இதுதவிர வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள படிவம் 6 ஏ வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து பெறப்படும் படிவங்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஆட்சேபனை விண்ணப்பங்கள், பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து இறுதி வாக்காளர் பட்டியல் 17.2.2026 அன்று வெளியிடப்படும்,”என கூறினார் .