வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இருத் தொகுதிகளுக்கான 14 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் வழங்கினார் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஞானவேலன்.

2026 சட்டமன்றத் தேர்தல், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக்கேட்பு கூட்டம் வேலூரில் நடந்தது. கூட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் வழங்கினார். மனுவில், குறிப்பிடப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு:
வாணியம்பாடி தொகுதிக்கான கோரிக்கைகள்:
- திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக ஆலங்காயம் தாலுகா உருவாக்க வேண்டும்.
- காவலூர் பகுதியில் மூலிகை பண்ணை அமைக்க வேண்டும்.
- நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை இணைத்து புதிதாக வாணியம்பாடி ஒன்றியம் உருவாக்க வேண்டும்.
- நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயணபுரம் ஊராட்சியின் அருகே உள்ள ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரி அருகே சுற்றுலா பூங்கா மற்றும் படகு கிளப்பு அமைத்திட வேண்டும்.
- மல்லகுண்டா ஊராட்சியின் அருகே சுற்றுலா பூங்கா அமைக்க வேண்டும்.
- வாணியம்பாடி அருகே ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள மாத கடப்பா மலையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த நிஜாம் காலத்து கோட்டையை சீரமைத்து மழையின் கீழ் அமைந்துள்ள துருகம் ஏரியை சுற்றுலாத்தலம் போல உருவாக்க வேண்டும்.
- தோல் பொருள்களை எளிதில் அனைவரும் வாங்கி செல்லும் வகையில் நவீன வடிவமைப்புடன் கூடிய விற்பனை மையம் ஏற்படுத்த வேண்டும்.
ஆம்பூர் தொகுதிக்கான கோரிக்கைகள்:
- திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்.
- பழமையான ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆம்பூர் விண்ணமங்கலம் ஊராட்சி பகுதியில் வெள்ளக்கல் கானாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.
- கடந்த 2006 – 2011 ஆட்சி காலத்தில் வேலை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த தொலைக்காட்சி பெட்டிகளை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ‘கலைஞர் தொலைக்காட்சி’ பெட்டிகள் என்ற பெயரில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கிய திட்டத்தை “தளபதி ஸ்டாலின்” பெயரால் ஸ்மார்ட் டிவிகள் வழங்கிட வேண்டும்.